எம்மைப்பற்றி

Who We Are

நாங்கள் யார்?

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கால்நூற்றாண்டுக்கு மேலாக நீடித்த கொடிய போரும், அதன் உச்சக்கட்டமாக நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் பேரவலமும், தமிழ்த் தேசிய இனத்தின் வரலாற்றில் மறக்க முடியாத பேரழிவுகளாகும். இந்தப் போரால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததோடு, எண்ணற்ற குடும்பங்கள் தங்கள் உறவுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து துயரத்தில் தத்தளித்தன.

இந்த வரலாற்றுப் பேரவலால் பாதிக்கப்பட்ட எங்கள் அன்பு தாயக உறவுகளுக்கு உதவும் நோக்கில், மனிதநேய உணர்வுடன் ஒன்றிணைந்த நண்பர்கள் குழுவொன்று ஜெர்மனியில் “உதவும் இதயங்கள் – Helping Hearts e.V.” என்ற அமைப்பை உருவாக்கியது. ஜெர்மன் நாட்டின் சட்டங்களையும் இறையாண்மையையும் மதித்து, ஒழுங்குமுறைகளுடன் பதிவு செய்யப்பட்ட எங்கள் அமைப்பு, 2012 ஆம் ஆண்டிலிருந்து சமூகநலப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

“உதவும் இதயங்கள் – Helping Hearts e.V.” (VR460552, Amtsgericht Spaichingen) அமைப்பு, தன்னார்வத் தொண்டர்களின் அர்ப்பணிப்பையும், வெளிப்படைத்தன்மை, நேர்மை, ஒழுக்கம் ஆகிய அடிப்படைக் கொள்கைகளையும் மையமாகக் கொண்டு செயல்படுகிறது. மனிதாபிமான சேவையை உயர்ந்த பொறுப்பாகக் கருதி, உண்மையாக உதவி தேவைப்படுகிற மக்களை நேரடியாக அடையாளம் கண்டு, திட்டமிட்ட மற்றும் நிலையான உதவிகளை வழங்கி வருகின்றோம்.

Our Mission and Vision

எமது சேவைகள் / செயல்திட்டங்கள்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் போராலும் அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் முன்னேற்றும் நோக்கில் எங்கள் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக அங்கவீனமடைந்தோர், கணவரை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், வறுமையில் வாழும் குடும்பங்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கி, அவர்களின் தேவைகளை நேரடியாக ஆய்வு செய்து உதவி செய்து வருகின்றோம்.

தொடர்ச்சியான உதவித் திட்டங்கள்

  • 250 மாணவர்களுக்கு தொடர்ச்சியான மாலை நேரக் கல்வித் திட்டம்.
  • தாய்–தந்தையை இழந்த உயர்கல்வி மாணவர்களுக்கு மாதாந்திர நிதியுதவி.
  • ஆதரவற்ற மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், மிதிவண்டி, உடைகள் உள்ளிட்ட உதவிகள்.
  • பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கு சிறு தொழில் வாய்ப்புகள் உருவாக்குதல் – கடை அமைத்தல், பால் மாடு, ஆடு, கோழி வளர்ப்பு மற்றும் விவசாய உதவிகள்.
  • குடிநீர் வசதி இல்லாத குடும்பங்களுக்கு நீர் வசதி ஏற்படுத்துதல்.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி, வீதியோர மரநடுகை மற்றும் “ஒரு வீட்டுக்கு ஒரு முருங்கை மரம்” திட்டம் வெற்றிகரமாக முன்னெடுத்தல்.
  • கிராம மகளிர் அமைப்புகளை உருவாக்கி, சுழற்சி முறைக் கடன் திட்டங்களுக்காக நிதி வழங்குதல்.
  • சிறுவர் இல்லங்களுக்கு தேவையான உதவிகள்.
  • வயோதிபர் இல்லங்களுக்கு ஆதரவு மற்றும் பராமரிப்பு உதவிகள்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு உதவித் திட்டங்கள்.
  • இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அவசர காலங்களில் உடனடி நிவாரண உதவிகள்.

மகளிர் அமைப்புகள் மூலம் முன்னெடுக்கப்படுபவை

  • சிறுவர் துஷ்பிரயோகம் எதிர்ப்பு விழிப்புணர்வு.
  • தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு.
  • பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு உதவுதல்.
  • சட்டவிரோத செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆதரவு.

தற்போது 300-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த இயக்கத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

Our Future Plans

எமது எதிர்காலத் திட்டங்கள்

“உதவும் இதயங்கள்” நிறுவனம் எதிர்காலத்தில் தன்னிறைவு கொண்ட சமூக முன்னேற்றத் திட்டங்களை உருவாக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தற்போது மாங்குளம் பகுதியில் விவசாயப் பண்ணை ஒன்று இயங்கி வருகின்றது.

தையல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பித்தல்
திறமையான பெண்களுக்கு தையல் வேலை வாய்ப்புகள் வழங்குதல்
கிராமந்தோறும் மகளிர் அணிகளை உருவாக்கி சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத் திட்டங்களை செயல்படுத்துதல்

எங்கள் நோக்கம், உதவி வழங்குவதைக் கடந்தும், மக்களை தன்னம்பிக்கையுடனும் தன்னிறைவுடனும் வாழக்கூடிய நிலைக்கு கொண்டு செல்வதாகும்.

Where We Are Based

எமது கிளைகள்

உதவும் இதயங்கள் அமைப்பு ஜெர்மனியில் பதிவு செய்யப்பட்ட சமூகநல அமைப்பாக இயங்கி வருகின்றது. அதேபோல் இலங்கையிலும் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டு, நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களை அடையாளம் கண்டு உதவிகளை வழங்கி வருகிறது.

ஜெர்மனி

“Helping Hearts e.V.”

VR460552 – Amtsgericht Spaichingen

இலங்கை

“உதவும் இதயங்கள் Foundation Germany”

பதிவு இலக்கம்: G.A. 3484

சுவிட்சர்லாந்து

24.02.2018 அன்று சுவிஸ் நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக கிளை ஆரம்பிக்கப்பட்டு, தாயக மக்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்து

இங்கிலாந்தில் மகளிர் அணியொன்று அமைக்கப்பட்டு, சமூகப்பணிகளில் செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக பாலக்குடா மாலைநேரக் கல்வி நிலையத்திற்கான கட்டிட வசதி, ஆசிரியர் கொடுப்பனவுகள் மற்றும் கல்விச் செலவுகள் இவர்களின் நிதியுதவியால் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், தாயகத்தில் கிளிநொச்சியிலும் எங்கள் நிறுவனம் பதிவு செய்யப்பட்டு, பல சமூகநல திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வணக்கம்! உதவி வேண்டுமா?