HelpingHeartsTamil

24.01.2023
“மாற்றம் ஒன்றே மாறாதது “
கிளிநொச்சி முகமாலையில் மிகக் கோலாகலமாக இடம்பெற்ற சுய தொழில் ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சிநெறி.!!!
“தொழில் வாய்ப்பு உருவாக்கலும் அதற்கான வழிகாட்டலும்” எனும் கருப்பொருளின் கீழ்,
கிளிநொச்சி முகமாலை மற்றும் இத்தாவில் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் ஆதரவோடு, கிராம மட்டங்களில் சுய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில், இந் நிகழ்வானது இன்றைய தினம்(24.01.2023) இத்தாவில் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த செயற்திட்டத்திற்கான முழுமையான நிதி அனுசரணையை “உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மனி” (Helping Hearts Foundation Germany) வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட தொழில் முயற்சியாளர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கை, கிளிநொச்சி மாவட்ட கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் உதவிப் பணிப்பாளர் திரு தி.தனம் மற்றும் தொழில் முயற்சி மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு ம.மயூரன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
அத்தோடு, விவசாயக் காப்புறுதி மற்றும் விவசாயிகளுக்கான காப்புறுதி தொடர்பான வழிகாட்டலை விவசாயக் காப்புறுதிச் சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு ம.மதிஈஸ்வரன் அவர்கள் வழங்கியிருந்தார்.
இந் நிகழ்வில் சமூக மட்டத்தில் காணப்படும் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்கும் நோக்கில் “போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ், ஈழத்து எழுத்தாளர் வவுனியூர் ரஜீவன் மற்றும் திரு G.கருணாகரன் (நிலையப் பொறுப்பதிகாரி,
சமூக அபிவிருத்தி தேசிய நிறுவனம்,பிராந்திய அலுவலகம் கிளிநொச்சி) ஆகியோர் விழிப்புணர்வு கருத்தரங்கை நிகழ்த்தியிருந்ததுடன், குறித்த கிராமத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந் நிகழ்வு தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த நிகழ்வில் பங்குபற்றிய தொழில் முயற்சியாளர்களுக்கு எதிர்வரும் வாரத்தில் உணவு உற்பத்தி தொடர்பான பயிற்சியும்(சிற்றுண்டி), இயற்கை வளங்களைப் பயன்படுத்தி கோழி மற்றும் கால் நடைகளுக்கான தீவனம் தயாரிப்பு பற்றிய பயிற்சி நெறியும், சிரட்டைக் கரித் தயாரிப்பு, கச்சான் உற்பத்திகள் போன்றவற்றுக்கான பயிற்சிகள் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த உற்பத்திகளுக்கான முழுமையான சந்தை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்சார்பு பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில், நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் வீட்டுத் தோட்டத்திற்கான விதை தானியமும் வழங்கிவைக்கப்பட்டது.
இத் திட்டத்தை எதிர்காலத்தில் மாவட்டங்கள் தோறும் “உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மனி” (Helping Hearts Foundation Germany) நடைமுறைப்படுத்தவுள்ளது.
இவ்வாறான திட்டத்தை தமது கிராமத்தின் வளர்ச்சிக்காக நடைமுறைப்படுத்திய “உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மனி” (Helping Hearts Foundation Germany) மற்றும் கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகியோருக்கு, நிகழ்வில் பங்கு பற்றிய தொழில் முயற்சியாளர்கள் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர்.

Leave A Reply